ஆடி நோம்பி....


தீபாவளி,பொங்கலுக்கு அடுத்து ஆவலோட எதிர்பார்த்திட்டு இருக்கிற நோம்பி இந்த ஆடி நோம்பி தான்.காவிரி சூலூர் பக்கம் பாயலைங்கறதுக்காக ஆடி நோம்பியைக் கொண்டாடாம இருக்க முடியுமா??மே மாசம் பள்ளிக்கூடம் ஆரம்பிச்ச பின்னாடி வர்ர மொத லீவு இந்த ஆடி நோம்பிக்குத்தான். இது தான் முக்கிய காரணமின்னாலும் தூரியாடறது, பட்டம் உடுறது, தேங்காயை வாட்டி சாப்பிடறதுன்னு இந்த நோம்பியை எதிர்பார்த்திட்டு இருக்க இன்னும் பல காரணங்கள் இருக்கு.

ஆடி 18 என்ன கெழமை வருதுன்னு அப்பா ஒரு மாசம் முன்னாடி பார்த்து சொல்லுவாரு. எங்க அத்தை ஊட்டுக்குப் போறதா இல்லை அவங்க இங்க வருவாங்களான்னு ஒரு பத்து நாளைக்கு வீட்டில பெரியவங்க டிஸ்கஷன் பண்ணுவாங்க.முடிவென்னமோ எப்பயும் போல அவங்க இங்க வருவாங்கன்னு தான் எடுப்பாங்க.அப்புறம் வழக்கம் போல எங்க அத்தை,மாமாவை நோம்பிக்குக் கூப்பிட எங்க அப்பா அவங்க வீட்டுக்குப் போயிட்டு வருவாரு.

அம்மியே பறக்கர மாதிரி அடிக்கற ஆடிக்காத்தில தூரி கட்டி ஆடாட்டி அப்புறம் அந்தக் காத்துக்கு என்ன மருவாதை? நோம்பிக்கு முன்னாடியே, வெள்ளிக்கெழமை சந்தையில போயி தண்ணி சேர்ந்திற கயிறு வாங்கிட்டு வந்து வச்சிருப்பாரு. எனக்கு ஒண்ணு, ஒடம்பொறப்புக்கு ஒண்ணு, ஒரம்பொறைக்கு ஒண்ணுன்னு மொத்தம் மூணு தூரி. முரட்டுக் கயிறு குத்தாம இருக்கக் கதர்கடையில வாங்கின பச்சைப் போர்வையை மடிச்சு அம்மா வைப்பாங்க.யார் வீட்டில என்ன பலகாரம்,யார் எங்கே போராங்க, யார் வீட்டுக்கு யார் வாராங்க, எப்போ பட்டம் உடற போட்டியை வச்சுக்கிறதுன்னு நோம்பிக்கு முன்னத்த நாள் முழுக்க, வகுப்பில இது தான் பேச்சாயிருக்கும்.சாய்ங்காலம் வீட்டுக்க வந்த உடனே யூனிபார்மைக் கூடக் கழட்டாம அம்மா சுட்ட முறுக்கை சாப்பிட்டுட்டே ஒரு பத்து வாட்டியாவது தூரியாடணும். கொஞ்ச நேரத்துல அத்தை,மாம்ஸ்,மச்சான் வருவாங்க. அத்தை கொண்டு வந்த உப்பட்டில ஒரு மூணைப் பழத்தோட சேர்ந்து அடிச்ச பின்னாடி ராத்திரிக்கு சோறு எறங்குமா?

நோம்பியன்னைக்குக் கார்த்தலை எல்லாரும் குளிச்சுட்டு செட்டா உள்ளூர்ல இருக்கிற சிவன் கோவிலுக்குப் போயிட்டு வருவோம்.சூலூர் குளத்தில மஞ்சள், வெத்தலையெல்லாம் வச்சு பூசை பண்ணுவாங்க. கோயில் பக்கத்தில இருக்கிற மயிலண்ணன் கடையில பலூன்,பீப்பீ,கலர் கண்ணாடி எல்லாம் மாம்ஸ் புண்ணியத்தில நம்ம கைக்கு வந்துடும்.மச்சான் பட்டம் உடறதுல கில்லாடி. கோயில்ல இருந்து வந்த உடனே பட்டம் கட்ட ஆரம்பிப்போம்.கட்டி முடிச்ச உடனே பட்டம் உட பீரங்கி மேட்டுக்குப் போயிடுவோம். சலிக்கிறவரைக்கும் பட்டம் உட்டுட்டு வீடு திரும்பும் போது தான் தெரியும் மத்தியானம் சாப்படவே இல்லைன்னு.வந்து சாப்பட்டை ஒரு கட்டு கட்டீட்டு மறுபடியும் தூரி தான்.எதாச்சி நல்ல படம் சண்முகதேவியில வந்திருந்தா ரெண்டாவது ஆட்டம் போயிட்டு வருவோம்...

அட..அட..அட..என்ன வாழ்க்கை அது...

ரைட்டுண்ணேன்...

இந்த வருஷம்,ஆகஸ்ட் மூணாந்தேதி ஆடி நோம்பி வருதாம். ஆடிப்பட்டம் தேடிப் பயிரிட்ட விவசாயத்தோழர்களுக்கும்,தலை ஆடிக்கு மாமனார் வூட்டுக்குப் போர அண்ணன் மார்களுக்கும், தூரி கட்டிக்கொடுக்கும் அப்பாமார்களுக்கும், முறுக்கு, உப்பட்டு செஞ்சு கொடுக்கிற அம்மாமார்களுக்கும் எங்களோட ஆடி நோம்பி வாழ்த்துகள்...

Source: http://konguvaasal.blogspot.com/2007/08/blog-post_03.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வீட்டில் நீங்கள் என்னெல்லாம் செய்கிறீர்கள்?

கோயிஞ்சாமியும் சர்தார்ஜியும்

மெயின் ஃபிரேம் கோயிஞ்சாமி